புலம் பெயர் வாழ்வு

வரலாறு எப்போதும் ஆச்சரியங்கள் மிகுந்ததாகவே இருந்திருக்கின்றது. இல்லையென்றால், ‘நள்ளிரவுச் சூரிய நாடு’ என்று சமூகக் கல்விப் புத்தகங்களின் உலகப் படங்களில் ஒரு மூலையில் ஒதுங்கியிருந்த நோர்வே நாட்டில்- தமிழ் மன்றம் அமைத்து, தமிழ்ப் பாடசாலை நடாத்தி, கோவில்கள் கட்டி, விளயாட்டுக் கழகங்களை உருவாக்கி தமிழர்கள் வாழ்வார்கள் என்று ஒரு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் எந்தத் தமிழனாவது கனவு கண்டிருப்பானா? உள்நாட்டு யுத்தங்கள், உலகமயமாக்கப்பட்டு வரும் பொருளாதாரங்கள், உலக அரசியலின் புதிய சமன்பாடுகள், அபரிமிதமான தொழில்நுட்ப வளர்சி என்பன- பரந்து விரிந்த பெரிய உலகம் என்று நாம் எண்ணியிருந்த இந்தப் பூமியை இன்று சின்னஞ் சிறியதாக்கியிருக்கின்றன. ஒஸ்லோவுக்கு அருகில் யாழ்ப்பாணம் இருப்பது போலவும்- சென்னைக்கு அருகில் சன்-பிரன்சிஸ்கோ இருப்பது போலவும் இன்றய தமிழர்களின் வாழ்வு நடக்கின்றது.

நோர்வேயில் தமிழர்கள்
உலகின் வடக்கு மூலையில்- குளிரிலும், பனியிலும் விறைத்துப் போயிருக்கும் நோர்வேயில் கிட்டத்தட்ட 12000 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் இந்திய, இலங்கை, மலேசிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு சில நூறு பேராகவும்- ஏனையோர் தமிழ் ஈழத்தை தங்கள் பூர்வீகத் தாயகமாக கொண்டவர்களாகவும் உள்ளனர். தலைநகரான ஒஸ்லோவில் ஏறக்குறைய 7000க்கும் அதிகமானோரும், நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கனில் சுமார் 900 பேர்வரையிலும், மூன்றாவது பெரிய நகரமான துரண்ணியத்தில் 200க்கும் சற்று அதிகமானோரும்- ஸ்ரவங்க்கரில் 200 பேர் வரையிலானோரும் -மீதமானோர் நாட்டின் ஏனைய பகுதிகளிலுமாக பரந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

துரண்ணியத் தமிழர்கள்
பிரபல பல்கலைக் கழகமான Norwegian University of Science and Technology (NTNU), பல உயர்கல்லூரிகள் என்பவற்றினைத் தன்னகத்தே கொண்டிருப்பதனால் நோர்வேயின் கல்வி நகரம் என்று வர்ணிக்கப்படும் துரண்ணியத்தின் மாநகர எல்லைக்குள்ளும்- அதன் சுற்றுப் புறப் பகுதியிலும் சுமார் இருநூறு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் நானூறுக்கும் அதிகமாகவிருந்த தமிழர்களின் எண்ணிக்கை துரண்ணியத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளின் காரணமாக பல தமிழர்கள் தலைநகரமான ஒஸ்லோவுக்கும் வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்ததினால் இன்று சிறுவர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 220 பேராக குறைவடைந்துள்ளது. காலத்துக்குக் காலம் நோர்வேயின் வேறு பாகங்களிலிருந்து கல்வியின் நிமித்தம் இங்கு வரும் தமிழ் மாணவர்களினால் துரண்ணியத் தமிழர்களின் எண்ணிக்கை வருடா வருடம் மிகச் சிறு அளவில் மாறுபடுவதுண்டு.

துரண்ணியத் தமிழ்ச் சமூகமானது கல்வியிலும், தொழிலிலும், பொருளாதாரத் தரத்திலும் வெற்றிகொண்ட ஒரு வெளிநாட்டுச் சமூகமாக இங்கு கருதப்படுகின்றது. நாடு தழுவிய புள்ளிவிவர அடிப்படையில் கடும் உழைப்புக்குப் பெயர்பெற்றவர்களாகவும் உயர்கல்வியில் நாட்டம் மிக்கவர்களாகவும் நோர்வேத் தமிழர்கள் கணிக்கப் படுகின்றனர். இக்கணிப்பீட்டினை துரண்ணியத்திலும் உறுதிசெய்யுமாப்போல் இங்கு வாழும் தமிழர்கள் ஆசிரியர்களாக, மருத்துவச் சேவையாளர்களாக, பொறியியலாளர்களாக, உணவகப் பொறுப்பாளாராக, கணக்காளராக, கணிப்பொறியாளராக, தொழில்நுட்பவியலாளராக, சமூகசேவைத் திணைக்கள அலுவலராக, உணவக உரிமையாளராக- என்று பல்வேறு விதமான துறைகளில் பணி புரிந்து வருகின்றார்கள்.

எண்ணிக்கையில் குறைவானாலும்- துரண்ணியத் தமிழ்ச் சமூகத்தின் சுறுசுறுப்பு அலாதியானது. ஐம்பதுக்கும் குறைவான குடும்பங்களே இங்கு வாழ்ந்தாலும் இரண்டு கோவில்கள், பல கலாச்சார அமைப்புகள், தமிழ்ப் பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் என்று தமிழர்கள் இங்கு பரபரப்புடன் இயங்குகின்றார்கள். இதன் காரணமாக, கோடை விடுமுறைக காலமாகிய ஜுன்-ஓகஸ்ட் மாதங்கள் தவிர- எல்லா மாதங்களிலும் ஏதாவது தமிழர் விழாக்கள் இங்கு நடைபெற்றவண்ணம் இருக்கும்.

துரண்ணியத் தமிழர்கள் தொழில், குடும்பம் என்று வாழ்வினைச் சுருக்கிகொள்ளமல் தமிழ்ச் சமூகச் செயற்பாடுகளில் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிவருகின்றார்கள். தமிழ்ப் பாடசாலைக்கும், இசை- நாட்டிய வகுப்புகளுக்கும் பிள்ளைகள அழைத்துச் செல்லுதல், தாம் சார்ந்திருக்கும் அமைப்புக்களின் சந்திப்புகளில் கலந்துகொள்ளல், கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்காக பிள்ளைகளைத் தயார்ப்படுத்தல், விளையாட்டுப் பயிற்சிகள் என்று சனி, ஞயிற்றுக் கிழமைகளில் இவர்கள் ‘பறந்த வண்ணம்’ இருப்பார்கள்.

தமிழ் மன்றம்(www.manram.net), ஈழத் தமிழர் சங்கம்(www.sangam.no), துரண்ணியம் தமிழரங்கம்(www.ttteater.com) ஆகிய கலை, கலாசார அமைப்புகளும், ஸ்ரீ தில்லர் கணேஷா ஆலயம், ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம் என இரு கோவில்களும், Tornado Sports club, North Star, Black Cats, United Tamil Sports Club ஆகிய விளையாட்டுக் கழகங்களும் இங்கே இயங்கி வருகின்றன. அன்னை பூபதி கலைக்கூடத்தின் துரண்ணியம் வளாகம் துரண்ணியம் தமிழ்ச் சிறுவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் பெரும் பணியைத் திறம்பட நடாத்தி வருகின்றது. .

Comments are closed.