தமிழ் மன்றத்தின் சஞ்சிகையான ‘திசை’ அரையாண்டிதழாக வெளிவரவுள்ளது. காலாண்டிதழாகவோ. மாதாந்தவிதழாகவோ வெளிக்கொண்ர்வதே நம் கனவெனினும் அதனை நனவாக்கும் சாத்தியங்களின் வரையறைகளினால்- இப்போதைக்கு ஏப்ரலிலும், டிசம்பரிலுமாக வருடத்துக்கு இரண்டு இதழ்களை வெளியிடுவதெனத் தீர்மானித்துள்ளோம். உறுப்பினர்களின் உற்சாகமான பங்களிப்பே இதழ்களின் எண்ணிக்கையினை இனிவரும் காலங்களில் தீர்மானிக்கும்.
எழுதுங்கள்! எழுதுங்கள்! எல்லோரும் எழுதுங்கள்!
எழுதுவதற்கென்று விசேட இரத்த வகை (blood group) இல்லை. எவரும் எழுதலாம். இலக்கியத்துக்கான நோபல் பரிசுவாங்கவா எழுதச் சொல்கிறோம்? ‘எங்கட கதய’ ‘எங்கட மொழியில’ எவரும் எழுதலாம்! ஆகையினால் எல்லோரும் எழுதுங்கள்!
இதழுக்கான ஆக்கங்களை விரைவாக media@manram.net என்ற ஈ-அஞ்சல் முகவரிக்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள்.
சிறுவர்களை எழுத விடுங்கள்!
சிறுவர்களை அவர்களின் தமிழில் அவர்கள் விரும்பியதை எழுத விடுங்கள். அவர்களின் பெயரில் பெற்றோர் எழுதியனுப்புவதனால் சாதிக்கப்படுவது எதுவுமில்லை
காலத்தைப் பதிவு செய்ய எழுதுங்கள்!
உலகெங்கும் சிதறுண்டு வாழும் எங்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டாக வேண்டும். நம் அனுபவங்கள் சொல்லப்பட்டாகவேண்டும். ஆகையினால் எழுதுங்கள்! எதை எதையெல்லாம் சொல்லவேண்டும் என்று தோன்றுகின்றதோ அவற்றையெல்லாம் எழுதுங்கள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என்று எதுவாயினும் சரி- ஆர்வத்தோடு எழுதுங்கள்.
தயவு செய்து உங்கள் ஆக்கங்களை கணனி ஆவணங்களாக – உதாரணமாக மைக்ரோசொவ்ட் வேர்ட் ஆவணமாக- அனுப்பி வையுங்கள். அது எங்களுக்கு நிறைய நேரத்தை மீதமாக்கும்.
