நிர்வாகம் - 2011
தாய்மொழி தமிழென்போர் ஒன்றியம்
தங்கத் தட்டில் சோறு தரும் நாடாய்த்தான் இருக்கட்டுமே! தமிழில் பேச நான்கு பேர் இல்லாவிட்டால் அந்த நாடு நரகம். என்னதான் வசதிகளுடனான வாழ்வாயிருந்தாலும்- கூடித் தமிழ் பேச வழியில்லையெனில் இதெல்லாம் ஒரு வாழ்வா?
நாள் முழுவதும் அன்னிய முகங்களுடன் மாய்ந்துவிட்டு வீடு திரும்புகையில் – தற்செயலாக ஒரு தமிழ் நண்பரைக் வழியில் காணும்போதும் மனதில் பொங்கும் ஒரு சந்தோசம் இருக்கிறதே, அது பாலை வனத்தில் அலைந்தவனுக்கு ஒரு குவளை நீர் கிடைத்ததுக்கு ஒப்பானது. தமிழர்களின் தாய் மண்ணைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட எங்களுக்கு- ஒரு மாலை நேரத்தில் வளர்ந்தவர்கள், மூத்தவர்கள், குழந்தைகள் என்று ஒரு பத்துப் பதினந்து தமிழ்க் குரல்களை ஓரிடத்தில் கேட்கக் கிடைப்பது ஒரு பாக்கியம். இதனை அடைய எங்களுக்குத் தேவைப் பட்ட ஒரு தளம் தான் எங்கள் தமிழ் மன்றம்.
நோக்கம்
துரொண்ணியம் நகரிலும் சுற்றுப் புறத்திலும் வாழும் தமிழ்பேசும் உறவுகளை ஒன்றிணைத்து – அவர்களிடையே நட்பையும் உறவினையும் உருவாக்கி – இங்கு ஒரு உயிர்ப்புள்ள தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் ஒரு தளமாக இயங்குவதே தமிழ் மன்றத்தின் பிரதான நோக்கம் ஆகும்.
செயற்பாடுகள்
மன்றத்தின் பிரதான நோக்கினை அடைவதற்கு, அங்கும் இங்குமாக வாழும் தமிழர்களை ஒன்றிணைப்பது அவசியமாகின்றது. மேற்குலக இயந்திர வாழ்வின் அங்கமாகி- நேரமின்மையால் திணறும் இவர்களைச் சந்திக்க வைப்பதென்பது ஓர் சவாலான விடயம். இதனைச் சாத்தியமாக்கும் பொருட்டு 4 பிரதான அம்சங்களைத் தமிழ் மன்றம் தனது செயற்திட்டங்களாகக் கொண்டுள்ளது :
1. சங்கமம்
முதியோர், வளர்ந்தவகள், சிறுவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடும் நிகழ்வு இது. மாதம் ஒரு தடவை (கோடை விடுமுறை காலம், சித்திரை, மார்கழி மாதங்கள் நீங்கலாக) நடை பெறும் இந்நிகழ்வில் சுவையான தமிழ் உணவுகள், சிற்றுண்டிகள் பரிமாறப் படுவதுடன் சிறுவர்களுக்கான வீடியோ திரைப் படங்கள், கணனி விளையாட்டுகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் நடாத்தப்படும். மூத்தோரும், வளர்ந்தோரும் துரண்ணியத் தமிழ்ச் சமூகம், சம கால அரசியல், சினிமா, இலக்கியம் போன்ற விடயங்கள் பற்றிப் பேசுகின்ற, விவாதிக்கின்ற சந்தர்ப்பமாக இந்நாளைப் பயன்படுத்திக்கொள்வர். இந்நிகழ்வின் முற்பகுதி மன்றத்தின் பொதுக்கூட்டமாகவும் அமையும்.
2. கலை நிகழ்ச்சிகள்
சிறுவர்களினதும், பெரியவர்களினதும் கலைத் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் சித்திரை மாதத்திலும், மார்கழி மாதத்திலும் கோலாகலமாக நடாத்தப்படும்.
3. விளையாட்டு
சிறுவர்களினதும், பெரியவர்களினதும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் பொருட்டு அனைத்து உறுப்பினர்களும் இல்லங்ககளக பிரிக்கப்பட்டு பல்வேறு உள்ளரங்க, வெளியரங்க விளயாட்டுப் போட்டிகள் நடாத்தப் படும். மேலும் உறுப்பினர்களின் தெரிவிக்கேற்ப குறிப்பிட்ட சில விளயாட்டுக்களுக்கு வாராந்தப் பயிற்சிகள் நடாத்தப் படுகின்றன.
4. சஞ்சிகை
துரண்ணியத் தமிழர்களின் வாழ்வினைப் பதிவு செய்ய திசை என்னும் இதழ்- எமது மன்றத்தினால் ஏப்ரலிலும், செப்ரெம்பரிலுமாக ஆண்டுக்கு இரண்டு தடவைகள் வெளியிடப்படுகின்றது.
வரலாறு
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு சித்திரை மாதத்திலிருந்தே உத்தியோக பூர்வமாக இயங்க ஆரம்பித்திருக்கும் தமிழ் மன்றத்துக்கு வரலாறு என்று குறிப்பிட்டுச் சொல்லத் தற்சமயம் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் துரண்ணியத்தில் இருபத்தி ஐந்து ஆண்டுகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வந்த போதும் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில்தான் – அதாவது தமிழர்கள் துரண்ணியத்துக்கு வந்து கால்நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழ் மன்றம் ஆரம்பிக்கப் பட்டதென்பது பல ஆச்சரியத்துடனான கேள்விகளை உருவாக்குமல்லவா! இந்தக் கேள்விக்கான பதில்களை வேண்டுமானால் தமிழ் மன்றத்தின் வரலாறு என்று சொல்லிக்கொள்ளலாம்.
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் இறுதிக் காலம்வரை இங்கு வாழும் அனைத்துத் தமிழர்களும் இங்கு இயங்கிவரும் தமிழர்களின் மற்றொரு அமைப்பான ஈழம் தமிழர் சங்கத்தின் உறுப்பினர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஈழம் தமிழர் சங்கத்தினால் சைவக் கோவில் கட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் உறுப்பினர்கள் இரு தரப்பாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
“பல்வேறு மதங்களைச் சார்ந்த தமிழர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒர் அமைப்பு தனது வளங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவது நியாயமற்றது- எனவே, கோவில் நிர்வாகம் ஈழம் தமிழர் சங்கத்தின் ஓர் அங்கமாக இல்லாது- சைவர்களை மட்டும்கொண்ட ஒரு தனி அமைப்பாக இயங்குதலே நியாயமானது” என்ற கருத்தும் “கோவில் நிர்வாகம் ஈழம் தமிழர் சங்கத்தின் ஓர் அங்கமாகவே இருக்க வேண்டும்” என்ற எதிர்க்கருத்துமே இச் சர்ச்சைக்குக் காரணமாகின. இதன் விளைவாக, ஓராண்டுக்கும் மேலாக இரண்டு ‘ஈழம் தமிழர் சங்கம்’ (சங்கங்கள்) இங்கே இயங்கி வந்தன. இந்த இழுபறி ஏற்படுத்தகூடிய சங்கடங்களை, குறிப்பாக எங்கள் இளைய தலைமுறையும் இந்தக் ‘கரடு முரடான’ பாதையில் பயணிப்பதைத் தவிர்க்கும் முகமாக-
- முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ‘ஈழம் தமிழர் சங்கம்’ நிர்வாகத்தினாலும்,
- கோவில் நிர்வாகம் ஈழம் தமிழர் சங்கத்தின் ஓர் அங்கமாக இல்லாது- சைவர்களை மட்டும்கொண்ட ஒரு தனி அமைப்பாக இயங்குதலே நியாயமானது” என்ற கருத்துடைய ‘ஈழம் தமிழர் சங்க’ உறுப்பினர்களாலும் எமது மன்றம் ஆரம்பிக்கப்ப்ட்டது.
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் திகதி- ‘ஈழம் தமிழர் சங்க’த்தின் வெள்ளிவிழாவைச் மிகமிகச் சிறப்புடன் கொண்டாடி- அந்த விழாவின் இறுதியிலே, ‘ஈழம் தமிழர் சங்கம்’ ஸ்தாபர்களில் ஒருவரான நாடகக் கலைஞர் திரு.க.பாலேந்திரா முன்னிலையில் “இன்றிலிருந்து நாங்கள் ‘துரண்ணியம் தமிழ் மன்றம்’ (Tamilsk Organisasjon – Trondheim TOT) என்னும் பெயரிலே இயங்குவோம்” என அறிவிக்கப் பட்டது.
மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி- துரொண்ணியம் நகரிலும் சுற்றுப் புறத்திலும் வாழும் தமிழ்பேசும் உறவுகளை ஒன்றிணைக்கும் அமைப்பான துரண்ணியம் தமிழ் மன்றத்தின் புதிய இலச்சினையும் (Logo) இவ்விழாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதுவே எங்கள் மன்றத்தின் நாகரீகச் சுருக்கமான வரலாறாகும்.
